×

நத்தாநல்லூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக அவலம் மழைநீர் வடிகால்வாய் இல்லாமல் சேறும், சகதியுமாக கிடக்கும் மண் சாலை: மெத்தன போக்கில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள்

வாலாஜாபாத், நவ.1: நத்தாநல்லூர் ஊராட்சியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி மக்கள் நடக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், இதில் ஒருசில தெருக்கள் பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே உள்ளன. இந்த சாலைகளில் லேசான மழை பெய்தாலும், அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், பொதுமக்கள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், ஆங்காங்கே குட்டைகள் போன்று மழைநீர் தேங்கி விடுகிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி, இங்குள்ள மக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, திருவள்ளுவர் தெருவில் மழைநீர் கால்வாய் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் துணி துவைக்கும் தண்ணிர், குளிக்கும் தண்ணீர் என அனைத்தும் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதையொட்டி இங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இதில் நடந்து செல்லும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.திருவள்ளுவர் தெருவில் மழைநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.தற்போது, தமிழகத்தின் பல இடங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, பலர் இறந்துள்ளனர். எனவே, பொதுமக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். மழைநீர் கால்வாய் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : mud road ,
× RELATED ஜமுனாமரத்தூர் அருகே தார்சாலை போட்டு 40...